பேண்ட் ஜிப்பில் அது மாட்டிக்கொண்டால் என்ன செய்வது?

மருத்துவமனையின் செருப்பொலிகளையும் முணுமுணுப்புச் சலசலப்புகளையும் கண்டு கொள்ளாத அமைதியைக் சுரீரெனக் கிழித்துக்கொண்டு அலறலாக ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்.

"குஞ்சு மாட்டுப்பட்டுப் போச்சு"

ஏதாவது விபத்தில் அவளது குழந்தை மாட்டுப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் மூளையின் கலங்களை அதிர வைக்க குதிக்கால் பிடரியில் அடிபடும் ஓட்ட நடையில் மருத்துவர் விரைந்தார்.

கட்டிலில் பையன். வலியின் கனதியில் கண்ணீர் மல்கக் கிடந்தான்.

அவனது ஒரு கையானது காற்சாட்டையைப் பற்றிக் கொண்டிருப்பதை அவதானித்தவருக்கு கேட்காமலே விசயம் புரிந்தது.





'மாட்டுப்பட்டது குஞ்சு அல்ல. குஞ்சின் குஞ்சு.'

ஆண்குறியின் மொட்டுப் பகுதியை மென்மையான தோல் மூடியிருக்கும். முன்தோல். Fore skin  என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுதான் மாட்டுப்பட்டிருந்தது. பாடசாலை முடிந்து வீடு வந்த பையனுக்கு அன்று ரியூசன் இல்லை. மகிழ்ச்சி பொங்கியது. விளையாடப் போவதற்காக உடைகளை மாற்றிக் கொண்டிருந்தபோதுதான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

காற்சட்டையின் ஜிப்பில் ஆணுறுப்பின் முன்தோல் மாட்டிக்கொண்டுவிட்டது.

இவ்வாறு ஜிப்பில் மாட்டுப்படுவது அரிதான விபத்து அல்ல. அதே நேரம் அடிக்கடி காணப்படும் பரவலான பிரச்சனை என்றும் சொல்ல முடியாது. எந்த வயதுள்ள ஆண்களிலும் இப் பிரச்சனை ஏற்படக் கூடுமாயினும் பெரும்பாலும் 2 முதல் 12 வயதான பையன்களிடயேதான் அதிகம் ஏற்படுகிறது.

சின்னப் பையன்களும் உள்ளாடை அணிவது பரவலான பழக்கமாக மாறிவிட்டதால் இடையிடையேதான் காண முடிகிறது. அவர்கள் தாங்களாக உடை அணியும் போதுதான் பெரும்பாலும் இத்தகைய விபத்து நிகழ்வதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. பெரும்பாலும் உள்ளாடை அணியாத பையன்கள்தான் இந்தச் சிக்கலில் மாட்டுப்படுவார்கள் என்று எதிர்பார்த்த போதும் அணிந்த பலரிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

முன்தோல் மட்டுமின்றி, ஆண்குறியின் மொட்டுப் பகுதி அகப்படலாம். தண்டும் மொட்டும் இணைகின்ற மிதப்பான வளைவுப் பகுதியும் மாட்டுப்படலாம். சில தருணங்களில் தண்டினது தோற்பகுதி மாட்டுப்பட்டிருப்பதும் உண்டு.

எந்தப் பகுதி மாட்டுப்பட்டாலும் உடனடிப் பிரசச்னை கடுமையான வலிதான். நேரம் கடந்தால் வீக்கமும் ஏற்படலாம். மென்மையான உறுப்பு., நரம்புகள் நிறைந்து இருப்பதால் உணர்வுச் செறிவு கொண்டது. இன்ப உணர்வுகளுடன் தொடர்புடைய பகுதி. வலியை அறியாதது என்பதால் வேதனை கடுமையாகத் தோன்றும். அத்துடன் என்ன ஆபத்து ஏற்படுமோ என்ற பயமும், தன்னுடைய உள்ளுறுப்பை வெளியே காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதே என்ற வெட்கமும் கூடி வர உடல் உள வேதனைகள் தாங்க முடியாதிருக்கும்.

நீங்கள் செய்யக் கூடியவை, கூடாதவை

அந்தரப்படாதீர்கள், அவசரப்படாதீர்கள். அமைதி பேணுங்கள். பிள்ளைக்கு பயப்பட வேண்டியதில்லை என ஆறதல் கூறுங்கள்.

ஜிப் கொளுக்கியை கழற்றுவதாக நினைத்து அதை, மேலே கீழே இழுத்துப் பார்த்து நிலமையை மோசமாக்காதீர்கள். அனுபவம் இன்றிச் செய்தால் புண்கள் கீறல்கள் ஏற்பட்டுவிடும்.

தேங்காய் எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு எண்ணையை கொளுவியிருக்கும் ஜிப்பின் மேல் தாராளமாக ஊற்றிவிட்டு பிள்ளையை சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்திருக்கச் செய்யுங்கள். ஊறிச் செல்லும் எண்ணெயின் வழுவழுப்பு தன்மையால் ஜிப் தானே கழன்றுவிடுவதாக பல மருத்துவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். இதை முதலுதவியாக வீட்டில் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

அவசரப்பட்டு காற்சட்டையின் துணியை வெட்டிச் சிதிலமாக்கி அகற்றிவிட்டு ஆணுறுப்பிலிருந்து தொங்கும் ஜிப்போடு குழந்தையை மருத்துவரிடம் அழைத்து வந்தவர்கள் இருக்கிறார்கள்.




கட்டாயம் வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால் ஜிப்பை ஆடையுடன் இணைக்கும் துணியை மட்டும் வெட்டுங்கள். புதிய ஜிப்பைத் தனியே பொருத்தி பின்னர் அதே ஆடையை உபயோகிக்க முடியும்.

அனுபமற்ற சில மருத்துவர்கள் அவ்விடத்தை மரக்கச் செய்து ஜிப்பை அகற்றுவதற்ற எண்ணி குழந்தையின் உறுப்பில் விறைக்கச் செய்யும் மருந்தை ஊசியால் ஏற்றுவார்கள். அவ்விடத்தில் ஊசி ஏற்ற முனைந்தாலே பிள்ளை கிலிகொண்டு வீரிட்டு அலறி முரண்டு பண்ணும். அது மாத்திரமின்றி அவ்விடம் மரத்தாலும் ஜிப்பைக் கழற்றுவது மேலும் சிரமமாகவாம். அதற்குக் காரணம் குருதிக் கண்டல் ஏற்பட்டு அவ்விடம் மேலும் வீங்குவதால் ஜிப் மேலும் இறுகிவிடும்.

எனவே எண்ணெய் போட்ட பின்தானாக வழுகிக் களன்று போகாது விட்டால் மருத்து ஆலொசனை பெறுவது அவசியம்.

விசேட முறை

மருத்துவர்கள் செய்யும் ஆபத்தற்ற முறை ஒன்றை இங்கு விளக்குகிறேன். துணிவுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளிலும் முயலலாம்.

அதற்கு முன்னர் ஜிப்பினது பகுதிகளை அறிந்து கொள்வது பயனுள்ளது. இரு பக்கங்களிலும் உள்ள ஜிப்புகளை இணைப்பது ஜிப் கொளுக்கி ஆகும்.




இதில் முற்பக்கத்தில் ஒரு தகடும் பிற்பக்கத்தில் மற்றொரு தகடும் இருக்கும். மேற்பக்கத் தகட்டிலேயே மேலும் கீழும் இழுக்க உதவும் தண்டு (Zip slider)  இருக்கும்.

முதலில் மாட்டுப்பட்ட சருமத்திற்கு வெளியே கொளுவுப்படாது இருக்கும் ஜிப்;பின் இரு பக்கங்களையும் குறுக்கு வாட்டாக கப்பி வெட்டியினால் வெட்டிப் பிரியுங்கள். தொடர்ந்து ஜிப்பின் பல்லுகளுக்கு அப்பால் உள்ள ஜிப்பின் துணிகளை வெட்டுங்கள். இதனால் அவை காற்சட்டையுடனான இணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கையாள இலகுவாக இருக்கும்.



இப்பொழுது ஒரு குறட்டை (Pliers )  எடுங்கள். ஜிப் கொளுக்கியின் முற்பகுதி பிற்பகுதி அடங்கலான பகுதியை படத்தில் காட்டியவாறு பக்கவாட்டில் குறடினால் அழுத்துங்கள். சமாத்திரமாக அழுத்தம் விழுமாறு இறுக அழுத்துங்கள்.



இவ்வாறு அழுத்தும் முன்தோலைப் பற்றியிருக்கும் ஜிப்பின் பகுதி தளரும். உடனடியாகவே மாட்டுப்பட்ட சருமம் விடுபடும். அவ்வாறு அழுத்தும் போது ஜிப் கொளுக்கியின் முற்பகுதிம் பிற்பகுதிக்கும் இடைப்பட்ட இடைவெளி அதிகரிப்பதாலேயே அவ்வாறு நிகழ்கிறது.




வேறு முறைகள்

மற்றொரு முறை பெரும்பாலனவர்களால் முயலப்படுகிறது. அது பல தருணங்களில் பலனளிக்கவே செய்கிறது. இருந்தபோதும் இது மிகுந்த வலியை ஏற்படுத்தக் கூடியது.

ஜிப் கொளுக்கியை எந்த பக்கமாக இழுக்கும்போது தோல் மாட்டுப்பட்டதோ அதற்கு எதிர்த் திசையில் இழுத்தால் பெரும்பாலும் சரிவரலாம். ஆயினும் சருமம் மாட்டுப்படதால் ஏற்கனவே தடித்து இருக்கும்போது அவ்வாறு மறுதிசையில் இழுக்கும்போது மேலும் இறுகுவதற்கான வாய்ப்பே அதிகம். ஆத்துடன் புண்படுவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.

மிகச் சிக்கலான தருணங்களில் மாட்டுப்பட்ட தோலின் பகுதியை மரக்க ஊசி போட்டு அகற்றுவது, மரக்கச் செய்து முழமையாக முன்தோலை அகற்றுவது (சுன்னத்து செய்வது என்பார்கள்), முழமையாக மயங்கச் செய்து முன்தோலை அகற்றுவது போன்ற சிகிச்சை முறைகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

எவ்வாறாயினும் பயப்பட வேண்டியதில்லை. வேறு பாதிப்புகள் இன்றி அகற்றிவிடலாம்.

இருந்தபோதும் ஜிப்பினில் மாட்டுப்படாது கவனமாக இருப்பதே சிறந்தது.
புகைப்படங்கள் நியூ டில்லி பாலிகா மருத்துமனை சார்ந்த Dr. S.C. Mishra அவர்களின் கட்டுரையிலிருந்து பெறப்பட்டது.